விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனை சரணடையுமாறு கூறவில்லை: மறுக்கிறார் கனிமொழி

Kanimozhi

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான எழிலன் என்ற சசிதரனை இலங்கை ராணுவத்திடம் சரணடையுமாறு தாம் கூறவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி மறுத்துள்ளார். 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்றது. இந்த இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் எழிலன் உள்ளிட்டோர் பலர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர்.
இன்று வரை இவர்களது நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் காணாமல் போனோர் தொடர்பாக முல்லைத் தீவு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புலிகளின் தளபதி எழிலன் என்ற சசிதரனின் மனைவி ஆனந்தி சாட்சியம் ஒன்றை அளித்தார். தற்போது இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினராக இருக்கும் ஆனந்தி, தமது கணவர் சசிதரன் சரணடையும் முன்பு தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் செயற்கைக் கோள் தொலைபேசியில் பேசினார். அப்போது கனிமொழி கொடுத்த உறுதிமொழியால்தான் சசிதரன் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார் எனத் தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சசிதரன் யாரென்றே எனக்குத் தெரியாது; மேலும் அவர் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் இல்லை. அத்துடன் அவருடன் நான் செயற்கைக் கோள் தொலைபேசியில் பேசி சரணடையுமாறு கூறுவதாக சொல்வது முற்றிலும் தவறு என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.