பாபா அணு ஆய்வு நடுவ இயக்குனர் சேகர் பாசு சென்னை வானூர்தி நிலையத்தில் பேட்டி :

Kudankulam-Nuclear-Power-Project_1

கூடங்குளம் முதல் அணு உலை பராமரிப்புப் பணிகளுக்காக 2 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது, அதுமட்டுமல்ல தொடக்கத்தில் இருந்தே அதில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுகின்றது, மேலும் அதன் முழுத்திறனான 1000 மெகா வாட் மின்சாரம் இன்னும் உற்பத்தி செய்யப்படவில்லையே?

கூடங்குளத்தில் உள்ள முதல் அணு உலையில் 1000 மெகாவாட் மின்சாரத்தை சில முறை உற்பத்தி செய்துள்ளோம். ஆனால் தற்போது 600 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. உலையில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுவது உண்மை தான். ஆனால் அவை உடனக்குடன் சரி செய்யப்பட்டு விடுகிறது. இது புதிய அணு உலை. அதனால் அவ்வப்போது பிரச்சனைகள் வருகிறது. இன்னும் சொல்லப்போனால் தொடக்கத்தில் தினமும் ஏதாவது பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் இதன் காரணமாக உலையின் பாதுகாப்பிற்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது. நீங்கள் புதியதாக ஒரு மகிழுந்து (Car) வாங்கினால் கூட, தொடக்கத்தில் அதிலும் சில பழுதுகள் ஏற்படத்தான் செய்யும். பழுதுபார்த்த பின்னர் சரியாகிவிடும். அது போலத்தான் அணு உலையும்.

அணு உலையை மகிழுந்துடன் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள். ஆனால் இது பல உயிர்கள் சம்மந்தப்பட்டதாயிற்றே? மேலும் இது போன்ற பழுதுகள் அணு உலை குறித்து போராட்டக்காரர்கள் கூறுவது உண்மையோ என்ற கேள்வியை எழுப்புகிறதே?

கூடங்குளம் மட்டுமல்ல. பிற மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வேதியியல் கூடங்களிலும் இது போன்ற பழுதுகள் ஏற்படும். கூடங்குளத்தில் உள்ள முதல் அணு உலையின் மொத்த உற்பத்தித் திறனான 1000 மெகாவாட்டை தொடர்ந்து நான்கு மாதங்கள் உற்பத்தி செய்து பார்த்துள்ளோம். எனவே உலையின் பாதுகாப்பில் எந்த பிரச்சனையும் இல்லை.

கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் 500 மெ.வாட் அதிவேக ஈணுலைப் பணிகள் எப்போது நிறைவடையும்?

இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஈணுலையில் முதலில் சோடியத்தை நிரப்பி ஆய்வு செய்த பின்னர், எரிபொருள் நிரப்பப்படும். அனைத்துப் பணிகளும் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும்.

கூடங்குளத்தில் உள்ள முதல் இரண்டு அணு உலைகளுக்கு யுரேனியத்தை வழங்கி வரும் ரஷ்யாவைச் சேர்ந்த T.V.E.L. நிறுவனம், 3 மற்றும் 4 ஆவது உலைகளுக்கு, முன்பை விட அதிக செறிவுள்ள யுரேனியத்தை வழங்க அனுமதி கேட்டிருந்ததே, அதற்கு நடுவணரசு ஒப்புதல் வழங்கிவிட்டதா?

அனுமதி அளிக்கப்பட்டுவிட்டதா? இல்லையா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதிக செறிவுள்ள யுரேனியம், உலையில் அதிக நேரம் எரியும். இதனால் அதிக லாபம் கிடைக்கும்.