பன்னீர்செல்வம் – அதிமுக

panneer selvam

இவர் மீது யார் வேண்டுமென்றாலும் விசுவாசம்,அடிமைத்தனம் என என்ன வேண்டுமானாலும் விமர்சனம் வைத்துவிட்டுப் போகட்டும்.
ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு கட்சியும்,அதன் தலைமையும் இப்படிப்பட்ட ஒரு விசுவாசி தங்களுக்கு கிடைக்க மாட்டாரா என ஏக்கத்தோடுதான் பார்ப்பார்கள்.
தமிழக மக்கள் அம்மா முதலமைச்சராக வேண்டுமென்று வாக்களித்தார்கள். சில சூழ்நிலைகளால் அவர் பதவி விலக நேரிட்டபோது அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டவர் திருவாளர்.பன்னீர்செல்வம்.

இவர் கட்சி தலைமைக்கு எந்த உறவும்,ரத்த சம்பந்தமும் இல்லாத கட்சியின் அடிமட்ட தொண்டராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பீகாரில் முதல்வர் பதவியை தன் நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு பின்னர் அவரை பதவியைவிட்டு விலக வைக்க நித்தீஷ்குமார் பட்டபாடு உலகத்திற்கே தெரியும்.
அதுபோன்ற அசம்பாவிதமோ,அரசியல் நிலையற்றதன்மையோ தமிழகத்தில் ஏற்படவில்லை.
அதற்கு முக்கிய காரணம் திரு.ஓ.பன்னீர்செல்வம் போன்ற எண்ணற்ற விசுவாசமிக்க தொண்டர்களை அதிமுக பெற்றிருப்பதுதான்.

அதிமுக கட்சியின் அடிமட்ட தொண்டன்கூட எப்போது வேண்டுமானாலும் மேயர்,எம்.எல்.ஏ. அமைச்சர்,எம்.பி, ஏன் முதல்வராகக்கூட ஆகமுடியும் என்ற நம்பிக்கையை கட்சி தலைமை அதன் தொண்டர்களிடம் விதைத்திருக்கிறது.
அந்த நம்பிக்கைதான் அதிமுகவின் பலம்.
தொண்டர்களின் பலமும்,பொது மக்களின் ஆதரவும் பெற்ற எந்த கட்சியும் தமிழகத்தை ஆளமுடியும்.

பெற்ற பிள்ளைகளுக்குகூட ஆட்சி அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாத தலைவர்கள் வாழும் காலத்தில் தன் கட்சியின் அடிமட்ட தொண்டனிடமும் பதவிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது அதிமுக.

அதிமுக தொண்டர்களுக்கும் அதன் தலைமைக்கும் இடையே இருப்பது பாசம்,கண்டிப்பு,ஆளுமை,தாயுள்ளம் என பலவித உணர்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு வித்தியாசமான உணர்ச்சி.
அதை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது. அனுபவித்தவர்களுக்கே புரியும்…