தமிழ்நாட்டில் மதுக்கடைகளை குறைக்கும் திட்டம் குறித்து ‘டாஸ்மாக்’ அதிகாரிகள் தீவிர கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

02:08:2015

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் வலுத்து வருவதால், தமிழக அரசு மதுக்கடைகளை குறைக்க திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது.

இதற்காக நேற்று முன்தினம்(வியாழக்கிழமை) இரவு ‘டாஸ்மாக்’ மேலாண் இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அதை நடைமுறைப்படுத்துவதற்கு அந்தந்த மாவட்ட மேலாளர்கள் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும், அதற்கான பணிகளை செய்து முடிக்க அவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மதுக்கடைகளை அதிரடியாக குறைப்பதற்கு மாவட்டங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொரு மாவட்ட மேலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகள் எத்தனை?, பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் எத்தனை?, வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள கடைகள் எத்தனை? பஸ் நிலையங்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களுக்கு அருகில் இருக்கும் கடைகள் எத்தனை? மருத்துவமனைகளுக்கு அருகில் இருக்கும் கடைகள் எத்தனை? கட்டிட உரிமையாளர் ஆட்சேபணை தெரிவிக்கும் மதுக்கடைகள் எத்தனை?
பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உள்ள கடைகள் எத்தனை?

மாநகராட்சி எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் 50 மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.75 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு?, நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 100 மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.50 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

கிராமப்புறங்களில் 5 கிலோ மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.30 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது குறித்து கணக்கெடுத்து, அதை உடனடியாக இ-மெயில் மூலம் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் இவ்வாறு இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக, விரைவில் 6 ஆயிரத்து 856 கடைகளில், சுமார் 500 முதல் 1,000 கடைகள் வரை மூடப்படக்கூடும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

சுமார் 500 முதல் 1,000 கடைகளை இனங்கண்டு மூடுவதால் எவ்வளவு விற்பனை குறையும்? என்பது குறித்தும், கணக்கெடுப்பின் மூலம் மூடப்படும் கடைகளில் வரும் வருமானம், அதற்கு அருகில் இருக்கும் கடைக்கு வருமா? என்பது குறித்தும் மாவட்ட மேலாளர்களை கணக்கெடுத்து அனுப்ப உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், மதுபானக்கடைகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்படும் என்பது பற்றியும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9.30 மணி வரை என்று நிர்ணயம் செய்தால், எவ்வளவு விற்பனை குறையும் என்பது குறித்து அதிகமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூடும்போது, அதில் பணிபுரிந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல், அவர்கள் மாற்றுக்கடைகளுக்கு பணி அமர்த்தப்பட்ட பிறகே வழங்கப்பட்டதாகவும் இதனால் பணியாளர்கள் மிகுந்த சிரமப்பட்டதாகவும், கணக்கெடுப்பு நடத்த வந்த அதிகாரிகளிடம் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது எடுக்கப்படும் கணக்கெடுக்கப்பின் மூலம் மூடப்படும் கடைகளில் பணியாற்றும் சுமார் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு சம்பளம் இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே கணக்கெடுப்பின்படி, கடைகளை தமிழக அரசு மூடினால், சம்பளத்துக்கு உத்தரவாதம் தரவேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, தற்போது வரை மூடப்படும் நிலையில் கோவையில் 150 கடைகள், சேலத்தில் 122 கடைகள், மதுரையில் 112 கடைகள், திருச்சியில் 65 கடைகள், சென்னையில் 119 கடைகள் உள்ளன என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.