தமிழின் தொன்மை:

tamil

1. தொன்மை:

தமிழ் மொழி உலக முதன் மொழியாகும். அது உலகத்தின் முதல் தாய்மொழியாகும். உயர்தனிச் செம்மொழியாகும். வரலாற்றிற்கு எட்டாத முதுபழந் தொன்மொழியாகும்.
தமிழை உலகத்து இருளை அகற்றும் சுடராகச் சொல்லும் பழம்பாடல்.
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் & ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.
விளக்கம்:
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.
(தண்டியலங்கார உரையில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள பழம்பாடல்)
2. தொன்மை:
எட்டாம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் புறப்பொரும் வெண்பா மாலையின் ஆசிரியராகிய ஐயனாரிதனர், குறிஞ்சியும் முல்லையுங் கலந்த பாலை நிலத்து மறவர் குடியின் பழைமையைக் குறிக்கும் இடத்து,
பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் – கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளடு
முற்றோன்றி மூத்த குடி. என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. குறிஞ்சி முல்லை வாணர் மிகப் பழைமையான தமிழ் வகுப்பார். அவர் குடியின் தொன்மை கூறவே, தமிழின் தொன்மையும் உடன் கூறியவாறாம்.
3. தொன்மை:
இனி, முத்தமிழ்த் துறைபோகி முற்றத் துறந்து, மூவேந்தரையும் முத்தமிழ் நாட்டையும் ஒப்பப் புகழ்ந்த சேர முனிவர் இளங்கோவடிகள், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றிய சிலப்பதிகாரத்துள்
பஃறுளி யாற்றுடன் பன்மைலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி.
என்று பாடியிருப்பது குமரிக்கண்டமே தமிழின் பிறந்தகம் என்பதும் தமிழின் முதுபழன் தொன்மையும் விளக்குகின்றது.
4. தொன்மை:
அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரையிலும்,
’அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானெனெ மலிந்த ஏழ்தெங்க நாடும்,
ஏழ்மதுரை நாடும்,
ஏழ் முன்பாலை நாடும்,
ஏழ் பின்பாலை நாடும்,
ஏழ்குன்ற நாடும்,
ஏழ்கண காரை நாடும்,
ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க்குமரி வட பெருங் கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிதலாற் குமரியாகிய பௌவமெ என்றார் என்று உணர்க’ என்று தொடியோள் பௌவமும் என்ற தொடருக்கு உரையாகச் சொன்ன செய்தியில் இருந்து, குமரிக்கண்டத்தில் இருந்த பஃறுளியாற்றிற்கும் குமரி ஆற்றிற்கும் இடைப்பட்ட தொலைவின் அளவும், பல்வேறு நிலப்பகுதிகளின் பெயர்களும் நமக்கு இவற்றால் தெரிகின்றன.
இவையெல்லாம் தமிழின் தொன்மை குறித்துத் தெளிவாகச் சொல்லும் தமிழ் இலக்கியச் சான்றுகளாம்