ஜெ. வழக்கு அப்பீல்.. சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணைக்கு வாய்ப்பு!

Jayalalitha-and-Supreme-Court

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா தொடர்ந்த அப்பீல் மனு மீதான விசாரணை அடுத்த வாரம் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை மற்றும், 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது, கர்நாடக ஹைகோர்ட்.

இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் இறுதியில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பில் குழறுபடிகள் உள்ளதாக கர்நாடக மனுவில் கூறப்பட்டுள்ளது. கணித கூட்டல் தவறுகளும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக அன்பழகன் சார்பிலும், சுப்ரீம்கோர்ட்டில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு வழக்குகளும் ஒரே நோக்கம் கொண்டவை என்பதால், வழக்குகளை, சுப்ரீம்கோர்ட் இணைத்தே விசாரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கர்நாடக அரசு தரப்புதான் முதல் வாதியாக சேர்க்கப்படும். எனவே அதில் இரண்டாவது வாதியாகவேஅன்பழகன் மனு கருதப்படும். கர்நாடகம், இதை அவசர மனுவாக கருதி விசாரிக்க கோரவில்லை என்பதால் உச்சநீதிமன்றம் தனது விருப்பப்படிதான் மனுவை விசாரணைக்கு எடுக்கும். ஜூலை 1ம் தேதி முதல், கோடை விடுமுறை முடிந்து உச்சநீதிமன்றம் முழு அளவில் இயங்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கர்நாடக தரப்பு மனு அடுத்த வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அப்போது திமுக தரப்பு மனுவும் இணைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் என்கின்றது சட்ட வல்லுநர்கள் தரப்பு. தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில், 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ஜெயலலிதா வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.