ஜெ. வழக்கில் மேல்முறையீடு: கர்நாடகாவுக்கு அதிகரிக்கிறது நெருக்கடி.. 21ம் தேதி சஸ்பென்ஸ் ஓவர்!

jayalalitha-india

பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சட்ட வல்லுநர்களிடமிருந்து கர்நாடக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கடந்த 11ம் தேதி ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டது.
தீர்ப்பில் பிழை?

இந்த தீர்ப்பில் கூட்டல் கணக்கில் பிழை இருப்பதாக அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியா பகிரங்கமாக தெரிவித்தார். மேலும், கர்நாடக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கடந்த 14ம்தேதி ஆச்சாரியா பரிந்துரை செய்தார்.
அட்வகேட் ஜெனரல்

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர்களுடன், கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார். இந்த ஆலோசனைக்கு பிறகு, ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அப்பீல் செய்வது நல்லது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். இதையடுத்து, இன்று, கர்நாடக அரசுக்கு தனது பரிந்துரையை அவர் அளித்தார். சில பிழைகள் மற்றும், சாதகமான அம்சங்களை சுட்டிக் காட்டி இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்தது என்று ரவிவர்மகுமார் சிபாரிசு செய்துள்ளார்.
அமைச்சர் ஆலோசனை

ஆச்சாரியா மற்றும் ரவிவர்மகுமார் ஆகியோரின் சிபாரிசுகளால், ஜெயலலிதா வழக்கில் அப்பீல் செய்ய கர்நாடக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ரவிவர்மகுமார் சிபாரிசு கிடைத்த சில மணி நேரங்களிலேயே கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
அமைச்சரவையில் கிளைமேக்ஸ்

இந்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை, வரும் 21ம் தேதி நடைபெறும் கர்நாடக அமைச்சரவை கூட்டத்தின்போது, ஜெயச்சந்திரா முன்வைப்பார். இதற்கு அமைச்சரவையில் பெரும்பாலான அமைச்சர்கள் ஒப்புதல் அளித்தால், அப்பீலுக்கு செல்லும் முடிவு எடுக்கப்படும். அதுகுறித்து அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் ஜெயச்சந்திரா அறிவிப்பார்.