ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்….. சென்னை உயர் நீதிமன்றம்

helmet

சென்னை: ஜுலை 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் வாகன ஓட்டிகளின் உரிமத்தை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மல்லிகா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அவர் இன்று அளித்த தீர்ப்பில் ஜுலை 1-ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்றும் அவர்கள் ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த ஹெல்மெட் வாங்கிய ரசீது காண்பித்த பின்னர் அவர்களுக்கு மீண்டும் ஓட்டுனர் உரிமத்தை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அனைத்து ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜுன் 18-ம் தேதிக்குள் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், அது தவறினால் 19-ம் தேதி தமிழக டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஹெல்மெட் அணிந்தால் இருபுறங்களிலும் வாகனங்கள் சரியாக தெரியவில்லை என்ற புகாரை ஏற்ற நீதிபதி அதற்கு ஏற்ற வகையில் ஹெல்மெட்டுகளை வடிவமைக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறை கூறியுள்ளார்.

இது தவிர அனைத்து சாலை சந்திப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிந்துள்ளார்களா என்று உறுதி செய்ய வேண்டும் என்று அவர் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.