ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி : தீவிரவாதிகள் அச்சம் : 3000 போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் மைதானம் மற்றும் ஹோட்டல்.

Pakistan-vs-Zimbabwe-Live-Streaming

லாகூர், மே 18

கடந்த ஆறு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடுவதை புறக்கணித்து வந்தது. நாளை பாகிஸ்தான் வந்து இறங்கும் ஜிம்பாப்வே அணிக்கு 3000 போலீசார் பாதுகாப்பு கொடுக்க இருக்கின்றனர். இந்த தொடர் மூலம் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது முடிவுக்கு வருகிறது.

எந்தவொரு அணியும் பாகிஸ்தான் வந்து விளையாட அச்சம் தெரிவித்த நிலையில் ஜிம்பாப்வே அணி மட்டும் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்தது. இதற்கான வேலைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் துரிதமாக செய்து கொண்டிருந்த வேலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பஸ் மீது தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். இதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இதனால் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் வர தயங்கியது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கானின் தொடர் முயற்சியால் மீண்டும் விளையாட சம்மதம் என ஜிம்பாப்வே அறிவித்தது.

இதனால் தங்கள் நாட்டுக்கு வரும் ஜிம்பாப்வே வீரர்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் பாகிஸ்தான் அரசு கவனமாக இருக்கிறது. இதனால் ஜிம்பாப்வே அணி நாளை பாகிஸ்தான் வந்தவுடன் அவர்கள் தங்கும் ஹோட்டல் மற்றும் விளையாட்டு நடைபெற இருக்கும் கடாபி மைதானத்தை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.

மொத்தம் 3000 போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஹோட்டல் மற்றும் மைதானங்களில் பாதுகாப்பிற்கு அமர்த்தப்படுகிறார்கள். மேலும், போலீசார் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

மைதானத்திற்கு போட்டியை காணவரும் ரசிகர்கள் பலத்த சோதனைக்குப் பிறகே உள்ள அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது போலீசார் அருகில் உள்ள கட்டத்தின் மீது நின்றும் ஹெலிகாப்டரில் பறந்தும் பாதுகாப்பை கண்காணிப்பார்கள்.

இந்த போட்டியை சிறப்பாக நடத்தி முடித்தால் மற்ற அணிகளையும் பாகிஸ்தானுக்கு அழைக்கலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது. இந்த தொடர் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெற்றால் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி 22-ந்தேதியும், 2-வது போட்டி 24-ந்தேதியும் நடைபெற இருக்கிறது. ஒருநாள் போட்டி 26, 29 மற்றும் 31-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டிக்கான நடுவர்களை நியமிக்க முடியாது என்று ஏற்கனவே ஐ.சி.சி. தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.