சென்னை அருகே பஸ் ஸ்டாண்டில் கேட்பாரற்று கிடந்த 30 ஏ.கே.47 துப்பாக்கி குண்டுகளால் பரபரப்பு!!

Ak 47

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் 30 ஏ.கே. 47 ரக துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குண்டுகள் இருதயராஜ் என்ற ஆயுதப் படை போலீசாருடையது எனவும் தெரியவந்துள்ளது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற தொழிலதிபருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருதயராஜ் என்ற ஆயுதப்படை போலீசார் நேற்று ஆறுமுகத்திற்கு பாதுகாப்புக்கு சென்றிருந்தார்.

அண்ணாசாலை தபால் அலுவலகத்திற்கு நேற்று மாலை ஆறுமுகம் சென்றிருந்தார். அவர் காரை வெளியில் நிறுத்தி விட்டு தபால் அலுவலகத்திற்குள் சென்றார். அவருடன் இருதயராஜும் சென்றுள்ளார்.

அப்போது கார் கதவை பூட்டாமல் சென்று விட்டதாக தெரிகிறது. சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது ஆறுமுகம் காரில் வைத்திருந்த பையை யாரோ திருடிச் சென்று விட்டனர்.

அந்த பைக்குள் செல்போன், காவலர் வைத்திருந்த துப்பாக்கியின் 30 குண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இது தொடர்பாக ஆறுமுகம் சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன துப்பாக்கி குண்டுகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் 30 குண்டுகள் இருந்தது கண்டெடுக்கப்பட்டன. இந்த குண்டுகள் இருதயராஜிடம் இருந்து திருடியதாக தெரியவந்துள்ளது.

இந்த குண்டுகளைத் திருடியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.