கொடைக்கானல் மலைப்பகுதியில் துணி வியாபாரி போல் நடித்து இளைஞர்களை மூளை சலவை செய்த மாவோயிஸ்டு

maaveeyishd

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் ஆயுத பயிற்சி பெறுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது தப்பி ஓடிய மாவோயிஸ்டு தலைவனாக இருந்த நவீன் பிரசாத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் 2008–ம் ஆண்டு நடந்தது.

இவனுடன் அயுத பயிற்சி பெற்ற பெண் டாக்டர் உள்பட 12 பேர் தப்பி ஓடி விட்டனர். இவர்களை பிடிக்க கியூ பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த மாதம் கோவையில் பதுங்யிருந்தபோது மதுரையை சேர்ந்த சரவணன் கைது செய்யப்பட்டார். ஆனாலும் அதிரடி வேட்டை தொடர்ந்து வந்தது.

இதனிடையே திண்டுக்கல் அருகே வடமதுரை பகுதியில் மாவோயிஸ்டு தங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் வடமதுரை விரைந்தனர். அப்போது மாவோயிஸ்டு அந்த வீட்டில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.

உடனே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரது பெயர் விநாயக் என்கிற நீலமேகம் (வயது 35) திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள நல்லாகவுண்டன்பட்டியை சேர்ந்த அய்யாவு மகன் என்பது தெரிய வந்தது. இவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

கைதான மாவோயிஸ்டு நீலமேகம் மாவோயிஸ்டு தலைவன் நவீன் பிரசாத்துடன் இணைந்து ஆயுத பயிற்சி பெற்றவன். மேலும் இவன் கொடைக்கானல் மலைப்பகுதியில் தங்கி துணி வியாபாரியாக நடித்து அங்குள்ள இளைஞர்களின் ஏழ்மை நிலையை அறிந்து வேலை இல்லாமையை காரணம் காட்டி அவர்களை மூளை சலவை செய்து தங்களுடன் இணைப்பதில் கை தேர்ந்தவனாக விளங்கினான். அதோடு துப்பாக்கி உதிரி பாகங்களை வாங்கி தயாரிப்பதிலும் அதனை பழுது பார்ப்பதிலும் வல்லவனாக திகழ்ந்தான்.

துணி வியாபாரி போல் இருந்ததால் போலீசில் சிக்காமல் இருந்துள்ளான். தற்போது ரகசிய தகவலின் பேரில் பிடிபட்டுள்ளான். மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்தது.

கைதான இவன் திண்டுக்கல் 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சுலைமான்சேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டான். நீதிபதி அவனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி மதுரை சிறையில் நீலமேகம் அடைக்கப்பட்டான்.