எம்.பி.க்களுக்கு சம்பளம் 1 லட்சமாக உயர்கிறது: மத்திய அரசுக்கு சிபாரிசு

parliament_house

எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்க பா.ஜனதா எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையில் பாராளுமன்றகுழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு சம்பள உயர்வு தொடர்பாக எம்.பி.க்களிடம் கருத்து கேட்டு வருகிறது. சம்பள உயர்வுடன் அலவன்ஸ் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்குவது தொடர்பாக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து பாராளுமன்ற குழு எம்.பி.க்களின் சம்பள உயர்வு உள்பட 60 சிபாரிசுகள் செய்துள்ளது.

இந்த சிபாரிசுகளை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்த பின்பு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி அமல்படுத்தும் இதற்கு முன் 2000 ஆண்டில் சம்பளம் உயர்த்தப்பட்டது.

தற்போது எம்.பி.களின் மாத சம்பளம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதை ரூ.1 லட்சமாக உயர்த்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதாவது சம்பளம் இரு மடங்காக உயர்கிறது. இதே போல் தற்போது பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது எம்.பி.க்களுக்கு ரூ.2 ஆயிரம் அலவன்ஸ் வழங்கப்படுகிறது. அதுவும் உயர்கிறது.

எம்.பி.க்களுக்கு மனைவியுடன் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகளில் இலவச பயணம், உடன் வருபவருக்கு 2–ம் வகுப்பு பெட்டியில் இருக்கை ஒடுக்கீடு, விமான பயணச்சலுகை அலவன்ஸ்,
இலவச வீடு ஒதுக்கீடு, 50,000 யூனிட் இலவச மின்சாரம், ரூ.4,000 கி.லிட்டர் தண்ணீர், டெலிபோனில் 50,000 இலவச அழைப்புகள் உள்ளிட்டவை தற்போது வழங்கப்படுகிறது. இதில் இலவச விமான பயணம் உடன் வருபவருக்கு ரெயில்வே 2–ம் வகுப்பு இலவச பயணம், இது இல்லாமல் கூடுதல் சலுகைகள் பெறவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர முன்னாள் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியத்தை ரூ.35 ஆயிரமாக உயர்த்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.