உளவுத்துறை ஐஜி பி.கண்ணப்பன் ஓய்வு….

IG

உளவுத்துறை ஐஜி பி.கண்ணப்பன் இம்மாதம் 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில், புதிய உளவுப்பிரிவு தலைவராக யாரை நியமிப்பது என்பதில் அரசு தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகிறது. முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் டிஜிபி கே.ராமானுஜம் போன்ற அதிகாரிகளை, ஓய்வுக்கு பிறகும், அரசின் ஆலோசகர்கள் என்ற பதவி கொடுத்து கவுரவித்து அவர்கள் சேவையை பெற்றுவருகிறது தமிழக அரசு. அதே பாணியில் கண்ணப்பனுக்கும், பதவி நீட்டிப்பு தர முன்வந்ததாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் உளவுத்துறை தலைவர் பதவிக்கு தற்போது மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. தமிழகத்திற்குள், அண்டை மாநில நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்துவதை கண்காணிக்கவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கரங்கள் இங்கு நீளாமல் தடுக்கவும், உளவுத்துறை முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. சட்டசபை பொதுத் தேர்தல் நெருங்கிவருவதும், ஆளும் கட்சிக்கு திறமையான உளவுத்துறையின் அவசியத்தை எடுத்துச்சொல்வதாக உள்ளது. உளவுத்துறை ஐஜியாக நியமிக்க அரசு சில மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பெயர்களை பரிசீலனை செய்து வருகிறதாம். உளவுத்துறை முன்னாள் ஐஜி அம்பரீஷ் பூஜாரி, நிர்வாக ஐஜி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், சென்னை தெற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் பி.தாமரைக் கண்ணன், கோவை மண்டல ஐஜி கே.சங்கர் மற்றும் காஞ்சிபுரம் டிஐஜி கே.என்.சத்யமூர்த்தி போன்ற அதிகாரிகள் இந்த பட்டியலில் உள்ளனர். இதில் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்துக்கு வாய்ப்பு அதிகம் எனப்படுகிறது. ஏனெனில், இவர், உளவுத்துறை எஸ்பி மற்றும் டிஐஜியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை கண்காணிக்கும் கியூ பிரிவு எஸ்.பியாகவும் பணியாற்றியுள்ளார். தாமரைக் கண்ணன், 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த புதிதில் குறுகிய காலம் உளவுத்துறை ஐஜியாக பணியாற்றியவர். உளவுத்துறை ஐஜி என்பவர், முதல்வருடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டிய அதிகாரியாகும். ஜெயலலிதா தினசரி நடவடிக்கைகளில் தன்னுடன் ஒரு சிலர் மட்டுமே உரையாட அனுமதிக்கிறார். அதில் உளவுத்துறை தலைவரும் ஒருவர். எனவே, இந்த பதவி, கவுரவம்மிக்கதாக ஐபிஎஸ் அதிகாரிகளால் பார்க்கப்படுகிறது.