ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த விண்வெளி செயற்கை கோள் கேமராக்களின் மூலம் கண்காணித்து நடவடிகை எடுக்க வேண்டும்.

C-Mahendran

ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் சி.மகேந்திரன் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை

 

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணிகளை செய்யவிடாமல் ஆளும் கட்சியினர் பெரும் இடையூறு செய்கிறார்கள். வேட்பாளர் வாக்களார்களை சந்திக்கும் வழித் தடத்திற்கான காவல்துறையின் அனுமதியை பெற்றுதான் செல்கிறோம். எங்கு சென்றாலும் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் வாக்காளர்களை சந்திப்பதை தடுக்கும் வகையில், எங்களை சுற்றி சுற்றி ஊர்வலங்களை நடத்தி குழப்பத்தை உருவாக்கு கிறார்கள். காவல்துறை எந்த நடவடிகையையும் எடுக்கவில்லை. வேடிகைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் பிரச்சாரம் செய்வதை தடுப்பது தான் அவர்களின் நோக்கமாக தெரிக்கிறது. தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம். ஆனால் தேர்தல் ஆணையம் இது வரை எந்த அத்துமீறலையும் தடுக்கவில்லை.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள். ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், அவர்களின் உதவியாளர்கள் என்று பெரும் எண்ணிகையில் தொகுதியில் குவிந்திருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாத அளவிற்கு விலையுயர்ந்த கார்கள் தெருக்களை அடைத்துக் கொண்டு நிற்கின்றன. இது பொதுமக்களுக்கும், தேர்தல் பிரச்சாரம் செய்யும் எங்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. இவர்களின் செலவுகள் அனைத்தும் வேட்பாளரின் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படுகிறதா என்பதற்கு, தேர்தல் ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவி இருப்பதாக கூறுகிறது. தேர்தல் அத்து மீறல்கள் சிறியதாக இருந்தால் கண்காணிப்பு கேமராக்கள் போதுமானதாக இருக்கலாம். அளவிட முடியாத வகையில் நடைபெறும் அத்துமீறலை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் போதுமானதாக இல்லை.

எனவே தேர்தல் ஆணையம் முதல்முறையாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த விண்வெளி செயற்கை கோள் கேமராக்களின் மூலம் கண்காணித்து நடவடிகை எடுக்க வேண்டும். முதலில் மக்களை நடமாட விடாமல் குவிந்து கிடக்கும் கார்களை கண்டறிந்து வெளியேற்ற முடியும். மற்ற ஆத்துமீறல்களையும் கண்டறிய முடியும். இதற்கு தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுககொள்கிறேன்

(சி.மகேந்திரன்)
ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர்