‘Drunken state of Tamil Nadu’ | ‘குடிகார நாடு… தமிழ்நாடு’ | VIKATAN

drunk_people_640_43

சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு என்ற பெரும் புகழைக் கொண்ட தமிழ்நாடு இன்று குடிகாரர்களின் நாடு என்று சொல்லும் அளவிற்கு பல கோடி ரூபாய் புரளும் குடியின் வருமானமும், நோயாளிகளின் எண்ணிக்கையும் கூட்டி தமிழ்நாட்டிற்கு டாஸ்மாக் சரக்கு ‘பெருமை’ சேர்த்துள்ளது.

தமிழக அரசின் சின்னத்தில் உள்ள ‘கோபுரத்திற்கு’ பதிலாக ‘டாஸ்மாக் பாட்டில்’ வைக்க வேண்டும் என குடிமகன்கள் கோரிக்கை வைக்கும் குடிமகன்களின் ஆதிக்கத்தில் தமிழகம் உள்ளது. அனைத்து நாட்டிலும் அரசாங்கம் மக்களை வாழ வைக்கும். நம் அரசாங்கமோ மக்களின் உயிர் எடுத்து வருகிறது.

இந்தியாவில் மதுவின் வியாபாரம் ரூ.1.4 லட்சம் கோடிகள். தமிழகத்தின் பங்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடிகள். குடிக்காத மக்களை கேவலமாக பேசும் அளவிற்கு குடிபோதை சரக்குகள் ‘வீரமான, மரியாதைக்குரிய’ விஷயமாகி விட்டது. தமிழக மக்கள் தொகை சுமார் 7.21 கோடி பேர் மூலம் அரசுக்கு டாஸ்மாக் விற்பனை ஆண்டுக்கு ரூ.30,000 கோடிகள். நம்மை விட பெரிய மாநிலமான 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தின் மது விற்பனை ஆண்டுக்கு ரூ.12,000 கோடிகள் மட்டுமே. குடி வெறி கொண்டு அலையும் கூட்டமாக தமிழ்நாடு மாறி விட்டதே உண்மை.

நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழர்கள், இன்று சரக்கு சாராய நீர் இல்லாமல் தூங்க முடியாத போதைக்கு அடிமையாகி விட்டனர். கணவர் என்றாவது ஒரு நாள் குடித்து விட்டு வீட்டிற்கு வருவார் என்று சொன்ன காலமெல்லாம் கடந்து, என்றைக்காவது ஒரு நாள் குடிக்காமல் தெளிவாக பேசுவாரா? என குழந்தைகள் கேட்கும் அளவிற்கு ‘குடி’ ஆக்கிரமித்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் குடி கலாச்சாரம் மெகாத் தொடர் போல தொடர்ந்து வரும் நிலையில், சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சோழங்குப்பம் கிராமத்தில் 4 வயது சிறுவனுக்கு மது கொடுத்து ‘வீரப்பரம்பரையை’ உருவாக்கும் விஷமிகளின் செயல் தமிழக கலாச்சாரம் எங்கே போகிறது என்ற கேள்வியை உலகத் தமிழர்கள் வேதனையுடன் கேட்கும் அளவிற்கு செய்து விட்டது.

பெண்களும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என, சினிமாவில் நடிக்கும் திரிஷா குடிக்கிறார், நயன்தாரா குடிக்கிறார் என இவர்களும் குடிபோதைக்கு மாறி வருவது அபாயகரமாக உருவாகி உள்ளது.

கட்டாய ஹெல்மெட் மூலம் மக்களின் உயிர் காக்க வாகனம், ஆவணப் பறிப்பு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், டாஸ்மாக் சரக்கால் உயிர் போவதை மட்டும் ஏன் கண்டுகொள்ளவில்லை? டாஸ்மாக் கடை முன் குவியும் வாகனத்தை ஏன் பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை? அரசுக்கு லாபம் ஈட்ட நீதிமன்றமும் துணை போகிறதா என்ற சந்தேகமே மக்கள் முன் கேள்வியாக நிற்கிறது.

மதுபானங்களில் உள்ள நச்சுத்தன்மை பற்றி அறிக்கை கேட்கும் நீதிமன்றம், மதுவால் நாட்டில் எத்தனை குடும்பங்கள் அழிந்துள்ளன எனக் கேள்வி கேட்காதது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையே.

மதுவினால், ஆண்டுக்கு சுமார் 25% பேர் சர்க்கரை, இதய நோயாளிகளாக வீட்டில் முடங்கி வருகின்றனர். இதேபோல், தமிழனின் ‘ஆண்மை’யையும் விலை பேசி வருகின்றன.

அரசுக்கு வருமானமே முக்கியம். குடும்பம் அழிந்து மனைவி, குழந்தைகள் தெருவில் அலைந்தாலும் குடிகாரனுக்கு டாஸ்மாக் கடையே முக்கியம். நீதிமன்றம் இது தனி நபர் விருப்பம் என்றும் சொல்லும். நீதிமன்றம் நிரந்தரமாக மதுவிற்கு தடை சொல்லாது என்ற நிலையில் இனி வரும் தலைமுறையாவது குடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

1. அடிப்படையிலேயே ஒருவர் மன தைரியத்துடன் போராடும் எண்ணம், நல்ல உணவுப்பழக்கம் இருந்தால் குடிபோதை எண்ணம் வராது. பெற்றோர், ஆசிரியர்கள் மது போதையால் வரும் மலட்டுத் தன்மை, புற்று நோய், இதய நோய் ஏற்படும் அபாயத்தை விளக்க வேண்டியது அவசியம்.

2. குடிபோதைக் கலாச்சாரம் குறைய கோவில் திருவிழாக்கள் சமயத்தில் ஒரு வாரத்திற்கு கடைகள் மூடப்பட வேண்டும். சபரி மலை, பழனி மலை விரத மாதங்களான 3 மாதத்திற்கு டாஸ்மாக் கடைகளை நீதிமன்றம் மூடச் சொல்ல வேண்டும். அதுவும் முடியாத பட்சத்தில் டாஸ்மாக் கடைகள் முன் வாகனம் நிறுத்த தடை வேண்டும். நீதிமன்றம் ஹெல்மெட் சட்டம் போல உடனடியாக தொலைக்கட்சி, திரைப்படங்களில் குடி போதை காட்சிகள் இடம் பெற அதிரடி தடை விதிக்க வேண்டும்.

3. மன அழுத்தம் ஏற்படாத வகையில் நடைப்பயிற்சி, உடற்பயிர்ச்சி செய்பவர்கள், உடல் நல அக்கறை கொண்ட சமூகத்தை உருவாக்கினால் மது, புகைக்கு அடிமையாக மாட்டார்கள்.

4. நல்ல சமூக எண்ணம் கொண்ட நடிகர்கள், டாஸ்மாக் சரக்கை ஒழிக்க மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் கட்டாயம் குடிக்கு எதிராக மக்களை நல வெளிப்படுத்தும் வசனம் இருக்க வேண்டும்.

5. பள்ளிகள், கல்லூரிகளில் குடித்து விட்டு வரும் ஆசிரியர்கள், மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

6. குடி போதையால் வரும் மலட்டுத் தன்மை, சர்க்கரை நோய், இதய நோய் பற்றிய விளிப்புணர்வை பொது இடங்களில் ஏற்படுத்த வேண்டும்.

7. எந்த ஒரு பொருளும் மக்கள் வாங்காத போது தானாகவே சந்தையில் இருந்து அந்தப் பொருள் வெளியேறும். அப்படி ஒரு வெளியேற்றத்தை மக்கள் டாஸ்மாக் சரக்கிற்கு கொடுக்க வேண்டும் . நாம் வாங்குவதால் தானே கோவில், பள்ளிகள் அருகில் கூட திறந்து வைத்துள்ளார்கள்.

8. திருமணம், காதணி விழா, கிரகப் பிரவேசம் போன்ற விழாக்களுக்கு அழைப்பதால் கொடுக்கும் போது அதில் டாஸ்மாக் மதுவை ஒழிக்கும் வகையில் சிறு வாசகம் இடம் பெறச் செய்ய வேண்டும். இல்ல விழாக்களை, கோவில் விழாக்களை குடி போதை கலவர பூமியாக மாற்றாமல் இருக்கச் செய்ய வேண்டும்.

9. பத்திரிகைகள் கட்டாயம் எதாவது ஒரு பக்கத்தில் தினமும் மக்களின் நல்வாழ்விற்கு சிறு இடத்திலாவது டாஸ்மாக் சரக்கை ஒழிக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

10. பேருந்துகளில் வள்ளுவரின் கள்ளுண்ணாமை திருக்குறளோடு விளக்கமும் கொடுக்க வேண்டும்.

11. ரயில்,தனியார் பயணச் சீட்டுகளில் டாஸ்மாக் ஒழிப்பு விளம்பரம் தர வேண்டும்.

12. நான்கு சக்கர வாகனத்தின் பின் பகுதியில் டாஸ்மாக் ஒழிப்பு விளம்பரம் கண்டிப்பாக இருக்கச் செய்ய வேண்டும்.

13. உண்ணும் உணவே நம் செய்கைக்கு காரணம். வலிமையான உடலுக்கு தீங்கு செய்யாத உணவுகளை உட்கொள்பவர்கள் மதுவிற்கு அடிமையாக மாட்டார்கள்.

14. கிராமங்களில் டாஸ்மாக் கடையை அகற்றவும், புதிய கடை திறப்பிற்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

15. மாணவர்களுக்கு டாஸ்மாக் மூலம் நோய் வாய்ப்பட்டவர்கள், செத்துப்போனவர்கள் பற்றிய விளக்கப்படம் 6 மாதத்திற்கு ஒரு முறை போட்டு காண்பிக்க வேண்டும்.

16. மது குடித்து விட்டு வண்டியை ஓட்ட முடியாதபடி புதிய தொழில் நுட்பம் கண்டு பிடிக்க வேண்டும்.