ஹெலிகாப்டரிலிருந்து தாக்கும் ‘ஹெலினா’ ஏவுகணை வெற்றி

helicopter

ஜோத்பூர் : இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட, 7 கி.மீ., துாரம் பாய்ந்து இலக்கை அழிக்கவல்ல ஏவுகணை, முதல் முறையாக, ஹெலிகாப்டரிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இதுகுறித்து, பாதுகாப்பு துறை வட்டாரங் கள், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நேற்று,
நிருபர்களிடம் கூறியதாவது: கவச வாகனங்களை தாக்கி அழிக்கவல்ல, ‘நாக்’ ஏவுகணையின் புது வடிவமான, ‘ஹெலினா,’ டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, ஹெலிகாப்டரிலிருந்து ஏவ முடியும்; 7 கி.மீ., துாரம் வரை பாய்ந்து சென்று இலக்கை அழிக்கும்.

ஏழு கி.மீ., துாரம் வரையிலான மூன்று வெவ்வேறு இலக்குகளை தாக்கும் வகையில், ஹெலினா ஏவுகணை, ஹெலிகாப்டரிலிருந்து நேற்று ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது. இச்சோதனைகளில், இரு இலக்குகளை, ஹெலினா தாக்கி அழித்தது; ஒரு இலக்கு தவறியது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் இச்சோதனை நடந்தது. ஆயுதப்படையில், ஹெலினா ஏவுகணை சேர்க்கப்பட்ட பின், நவீன இலகுரக ஹெலிகாப்டரான, துருவ் உடன், ஒருங்கிணைக்கப்படும். துருவ் ஹெலிகாப்டர், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இவ்வாறு பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறின.