லிட்டருக்கு 5 கிமீட்டர் மைலேஜ் தரும் ஜெயலலிதாவின் கார்கள்!

jayalalitha-india

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் 9 வாகனங்கள் இருப்பதாக தேர்தல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா 1980ஆம் ஆண்டு வாங்கிய அம்பாஸிடர் துவங்கி கான்டெஸா, பொலிரோ, இரண்டு லேண்ட்க்ரூஸர் ப்ராடோ கார்களைத் தன் பெயரில் வைத்திருக்கிறார். கார்கள் தவிர டெம்போ ட்ராவலர், ஸ்வராஜ் மஸ்டா மேக்ஸி வேன், டெம்போ ட்ராக்ஸ், மஹிந்திரா ஜீப் ஆகிய வாகனங்கள் ஜெயலலிதாவின் பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லேண்ட் க்ரூஸர் ப்ராடோ கார் வாங்குவதற்கு முன்பு ஜெயலலிதா மிட்சுபிஷி பஜேரோ கார்களைப் பயன்படுத்திவந்தார். அதற்கு முன்பு டாடா சஃபாரி கார்களைப் பயன்படுத்திவந்தார். ஜெயலலிதா தற்போது பயன்படுத்திவரும் கார்கள் அவர் பெயரில் இல்லை. ஜெயலலிதா டொயோட்டா எல்சி200 காரைத் தற்போது பயன்படுத்திவருகிறார். ஜெயலலிதாவிடம் இப்போது நான்கு டொயோட்டா எல்சி200 கார்கள் இருக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் இருந்து தீர்ப்புக்காக பெங்களூர் சென்றபோது எல்சி200 காரில் சென்றார் ஜெயலலிதா. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தபோது தனது பழைய லேண்ட்க்ரூஸர் ப்ராடோ காரில் வந்தார். சிறைக்கு சென்ற கார் என்கிற துரதிஷ்டம் காரணமாக பழைய எல்சி200 கார்களுக்கு பதிலாக புதிதாக இரண்டு எல்சி200 கார்கள் வாங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்களில்தான் பதவியேற்பு விழாவுக்கு வந்தார் ஜெயலலிதா. எல்சி200 கார் ஒன்றின் விலை 1 கோடியே 50 லட்சம் ரூபாய்.

ஜெயலலிதா பயன்படுத்தும் எல்சி200 காரில் பாதுகாப்புக்காக 10 காற்றுப்பைகள் இருக்கின்றன. 4-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் ஏஸி இருப்பதோடு முன்பக்க இருக்கைகளுக்கு கூலிங் வசதி உண்டு. இதில் இருப்பது 4.5லிட்டர் திறன்கொண்ட வி8 டர்போ டீசல் இன்ஜின். 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. இது 0-100கிமீட்டர் வேகத்தைத் தொட 13 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். இது நகருக்குள் லிட்டருக்கு 5கிமீட்டர் மட்டுமே மைலேஜ் தரும்.