லலித்மோடி விவகாரத்தில் 7 கேள்விகள்: மத்திய அரசை உலுக்கும் சிதம்பரம்

lalit

சுஷ்மா சுவராஜை லலித்மோடி தொடர்பு கொண்டது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறி உள்ளார். இந்த விவகாரத்தில் 7 கேள்விகளைக் கேட்டு, அதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளார்.

லலித்மோடி-சுஷ்மா சுவராஜ் விவகாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்களும் உதவியதாக லலித்மோடி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். குறிப்பாக, சிதம்பரத்தின் மீது அவர் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார்.

கடிதங்களே சாட்சி: இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம், இது தொடர்பாக கூறுகையில், ‘2010ல் அமலாக்கப் பிரிவின் பரிந்துரை காரணமாகவே லலித்மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இங்கிலாந்து அரசுடன் விவாதித்த பின்னரே லலித்மோடி மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டது. காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கைகள் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட கடிதங்களில் இருந்தே தெரியும்,’ என்றார்.

பா.ஜ., அரசு மீது பாய்ச்சல்: லலித்மோடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் மத்திய அரசுக்கு கேள்விகளை எழுப்பினார். ‘இங்கிலாந்து அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தை ஏன் வௌியிடவில்லை? லலித்மோடியின் வேண்டுகோள் தொடர்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகக் கூறி ஏன் சுஷ்மா சுவராஜ் கூறவில்லை? லலித்மோடியை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப தற்போதைய அரசு ஏன் வலியுறுத்தவில்லை? லலித்மோடியை இந்தியா திரும்புமாறு ஏன் சுஷ்மா கூறவில்லை? லலித்மோடியை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வரும் சக்தி இந்த அரசுக்கு இல்லையா? ஏன் இதுவரை லலித்மோடி பாஸ்போர்ட் ரத்து குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவில்லை? அதை செய்யவிடாமல் தடுத்தது யார்?’ என்பன உள்ளிட்ட ஏழு கேள்விகளை சிதம்பரம் எழுப்பி உள்ளார்.