மேகி – விஷம் ஒரு விஷயமா?

unhygine food

நாடே நெஸ்லேவை வாண்டலில் போட்டு வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. வாய் வழியே உள்ளே தள்ளியதை, தலைக்கு மேல் ஏறிய விஷமாய், விவாதம் செய்து கொண்டிருக்கிறோம். உண்மை என்னவென்றால் மேகியை விட, கொடிய நஞ்சுகளை, ஏசி அறையில் உண்டும், குடித்தும், வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மேகியை விட மேலான நஞ்சுயெல்லாம், நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கின்றன. தம்பி இழுத்து பூட்டுடா அந்த கேட்டை என்று ஒரே அடியாக மூடி விடவும் முடியாது. எல்லா விதமான நஞ்சுகளுக்கும் நாம் அனைவரும் மறைமுகமான அடிமைகள். மேகியை கை கழுவி விட்டு வேறு தட்டில் கை வைப்போம். அவ்வளவுதான் இந்த விழிப்புணர்வு மாற்றம்.

செருப்பை குளிர்யூட்டப்பட்ட அறையிலும், சோற்றை நடைப்பாதையிலும் விற்கும் தேசமிது. இங்கே சுகாதாரம் என்பது, பாலீதீன் பேப்பரால் மூடப்பட்ட சமோசாதான். அதைக் காட்டிலும் பாதுகாக்கப் பட்ட உணவுகளை எதிர்பார்த்தால், கடைசியில் பசியில் தான் சாக வேண்டும்.

குடலுக்கு ஒவ்வாத பீட்சா, ஈக்கள் மொய்க்கும் கறிகடை, சாக்கடைக்கு பக்கத்தில் மீன்கடை, முப்பது நாளில் வளர்ந்து விடும் கோழிகள், வீட்டில் வளர்க்கும் காளான், கார்பைடு கல்லில் விழுந்த பழங்கள், பூச்சிக்கொல்லில் விளைந்த காய்கறிகள், ரசயான குளிர்பானங்கள், வறுத்து கவரில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகள், இங்கே எதை தொட்டாலும் ஒவ்வாமையே. அம்பானி விற்பதில் தொடங்கி தெருவோர ஆயா கடைகள் வரையில் விதி விலக்கல்ல.

மேகியை வறுத்துதெடுத்து விட்டு, இதையெல்லாம் அனுசரித்து கொள்கிறோம். முன்புபொரு காலத்தில் கோக், பெப்சி விஷம் என்றார்கள். ரெண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஸ்பான்சர் கொடுத்ததும், அதை மறந்தே போனோம். நெஸ்லே விடவும் பணமிருக்கிறது. ஏதாவது விளையாட்டு காட்டுவார்கள்.