மும்பையில் பத்திரிகை நிருபர் ராகவேந்திரா துபே படுகொலை… பதற்றம்

Raghavendra

மும்பை மீரா ரோட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் பத்திரிகை நிருபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் பெயர் ராகவேந்தர் துபே என்பதாகும். மும்பை புறநகர் பகுதியான நயா நகரில் உள்ள ஒயிட் ஹவுஸ் பாரில் போலீஸார் ரெய்டு மேற்கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராகவேந்திர துபே அங்கு செய்தி சேகரிக்கச் சென்றார். அவருடன் மற்றொரு பத்திரிகையாளரும் செய்தி சேகரிக்க அங்கே சென்றுள்ளார். அப்போது இருவரையும் பார் ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து ராகவேந்திர துபே அங்கிருந்து மீரா நகர் காவல் நிலையம் சென்றுள்ளார். காவல் நிலையத்தில் இருந்து ராகவேந்தர் துபே புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே எஸ்.கே.ஸ்டோன் பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக காவல் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் வந்துள்ளது. போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது அது ராகவேந்தர் துபே எனத் தெரியவந்துள்ளது. முன்னதாக அதே பாரில் ரெய்டு நடந்த போது உள்ளூர் பத்திரிகை நிருபர்கள் சந்தோஷ் மிஸ்ரா, சாஷி சர்மா அங்கு சென்றுள்ளனர். போலீஸார் நடவடிக்கையை அவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது பாரில் இருந்து ஊழியர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்று சில நிமிடங்களில் ராகவேந்தர் துபே செய்தி சேகரிக்க சென்றார் என்றார் குறிப்பிடத்தக்கது. உத்தரபிரேதேசம், மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் பத்திரிகையாளர்கள் எதிர்த்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மும்பையில் பத்திரிக்கையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ராகவேந்தர் துபே மரணத்துக்கு நியாயம் கேட்டு மும்பை பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.