பார் கவுன்சில் விதியால் வழக்கறிஞர்களுக்கு சிக்கல்!!!

Bar-Council-of-India

பார் கவுன்சிலில் பதிவு செய்த பின், பிராக்டீசுக்கான தேர்வில் தேர்ச்சி பெறாத, ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களின் உரிமம் ரத்தாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சட்டப் படிப்பு முடித்தவர்கள், பார் கவுன்சிலில் பதிவு செய்தால் தான், நீதிமன்றத்தில் ஆஜராக முடியும். 2010ல், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்திய பார் கவுன்சில், ஒரு விதிமுறையை கொண்டு வந்தது.

அந்த விதிகள் விவரம்:

* பார் கவுன்சிலில் பதிவு செய்த பின், ‘சர்டிபிகேட் ஆப் பிராக்டீஸ்’ சான்றிதழ் பெற வேண்டும். அதற்கு, பார் கவுன்சில் நடத்தும் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த சான்றிதழ் பெற்றால் தான், வழக்கறிஞராக, நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராக முடியும்.
* பார் கவுன்சிலில் பதிவு செய்த பின், மூன்று ஆண்டுகளில், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
சமீபத்தில், மதுரை வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கு ஒன்றை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’, ‘பார் கவுன்சில் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் உரிமத்தை, ரத்து செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டது.ஒவ்வொரு ஆண்டும், குறைந்தது, 3,000 பேர், பார் கவுன்சிலில் பதிவு செய்கின்றனர். 2010ல் இருந்து கணக்கிட்டால், ஐந்து ஆண்டுகளில், 18 ஆயிரம் பேராவது பதிவு செய்திருப்பர்.இவர்களில், பார் கவுன்சில் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை, ஆயிரக்கணக்கில் இருக்கும் என, கூறப்படுகிறது. ‘தேர்ச்சி பெறாதவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்’ என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்பு அறுந்து விடும்

மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது:பார் கவுன்சிலில் பதிவு செய்த பின், மூன்று ஆண்டுகளில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களின் பதிவை ரத்து செய்து விட்டால், பார் கவுன்சிலுக்கும், அவர்களுக்கும் உள்ள தொடர்பு அறுந்து விடும். அதன்பின், அவர்கள் தேர்வு எழுத முடியாது.அடுத்த மாதம், இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது, பார் கவுன்சில் தரப்பில், தேர்ச்சி பெறாதவர்களின் பட்டியல் தாக்கல் செய்யப்பட உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து, பார் கவுன்சில் நடவடிக்கை இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.-