ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவில் 10 குறைபாடுகள்: விசாரணை தாமதமாகும்!

Jayalalitha-and-Supreme-Court

சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுவில், 2 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளது உள்பட 10 குறைபாடுகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால், விசாரணை மேலும் தாமதமாகும் என தெரிகிறது.
=
வருமானத்துக்கு அதிகமாக‌ ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, நான்கு பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.
=
இதை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, கடந்த மே 11ஆம் தேதி நான்கு பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பில் பல அடிப்படை தவறுகளும், கணித பிழைகளும் இருப்பதால் க‌ர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
=
இதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தலைமையிலான ச‌ட்ட நிபுணர்கள் அடங்கிய குழு, ஜெயலலிதாவுக்கு எதிரான‌ மேல்முறையீட்டு மனுவை கடந்த மாதம் 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 2,377 பக்கங்கள் கொண்டதாக இந்த மேல்முறையீட்டு மனு இருந்தது.
=
இந்த மேல்முறையீட்டு மனுவை ஆராய்வதற்காக, குற்றவியல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்த 6 பேரை உச்ச நீதிமன்ற பதிவாளர் நியமித்தார். இந்த சட்ட நிபுணர்கள் குழு, கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆராய்ந்ததில், 10 முக்கிய குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மனுவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, தலைமை பதிவாளரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. எனவே மேல்முறையீட்டு மனுவில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டார்.
=
அதில், ”க‌ர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் 1,223 மற்றும் 1,453 ஆகிய 2 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளது. இதேபோல 1,605ஆம் பக்கத்தில் இருந்து 1,629ஆம் பக்கம் வரை தாளின் மேற்பகுதியில் முறையாக பக்க எண் குறிப்பிடப்படவில்லை. மனுவை விசாரணைக்கு ஏற்கும் வகையில் அசல் பிரமாணப் பத்திரத்தை இணைக்கவில்லை. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை மற்றும் ரத்து செய்யக்கோரும் முக்கிய வேண்டுகோளில் ஆணை வெளியான தேதிகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
=
நீதிபதி குன்ஹா மற்றும் குமாரசாமி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பல முக்கிய அரசு சான்று ஆவணங்களை மனுவில் இணைக்கவில்லை. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் வழக்கில் வெளியான இறுதி தீர்ப்பு, மனு மீதான தீர்ப்பாணைகள், விசாரணை நீதிமன்றத்தின் முக்கிய‌ குறிப்புகள், வெளியிடப்பட்ட‌ அரசாணைகள், பின்இணைப்புகள், வழிகாட்டல்கள் ஆகியவை இணைக்கப்படவில்லை.
=
குறிப்பாக 28.4.2015 அன்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா நியமிக்கப்பட்டது தொடர்பான கர்நாடக அரசின் அரசாணை தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக மேல்முறையீட்டு மனு தயாரிக்கப்பட்ட தேதி, தாக்கல் செய்யப்பட்ட தேதி ஆகியவை குறிப்பிடப்படவில்லை என 10 குறைபாடுகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
=
இதையடுத்து அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தலைமையிலான குழு, மேல் முறையீட்டு மனுவை பல பிரிவுகளாக பிரித்து திருத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனால் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தாமதமாகும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.