சென்னை சூப்பர் கிங்ஸூக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மனு… களம் இறங்கும் சுப்பிரமணியசாமி..

CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதித்துள்ள இரண்டாண்டு தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்போவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். முறைகேடு வழக்கில் லோதா குழுவின் அறிக்கையில் கூறியபடி, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை அணிக்கான தடையை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… ஐ.பி.எல். முறைகேடு வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையில், சில தனிநபர்களுக்கு பி.சி.சி.ஐ. நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வாழ்நாள்தடை விதித்து இருப்பது மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படுகிறது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதித்திருப்பது மிகவும் கடுமையான தண்டனையாகவும் தோன்றுகிறது. கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் இயங்கி வந்த துபாய் கும்பல் எந்த வகையிலும் தலையிடாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்த பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மீது தமிழர்கள் அனைவரும் நல்ல மதிப்பு வைத்துள்ளனர். எனவே தமிழர்களின் சார்பிலும் பொதுநலம் சார்ந்தும் நீதிபதி லோதா குழுவின் முன்பு சென்னை அணிக்கு விதித்துள்ள தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மனு தாக்கல் செய்வேன். இவ்வாறு தனது அறிக்கையில் சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.