சென்னையின் புதிய அடையாளம் மெட்ரோ ரெயில்!!!!!

METRO Chennai

அண்ணாந்து பார்க்க வைக்கும் ஆகாய மேம்பாலங்கள்… அதன் மீது பறந்து செல்லும் ரெயில்கள்…

வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடம். சென்ட்ரலில் இருந்து ஆலந்தூர் வரை மற்றொரு வழித்தடம். மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம்.
20 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும் இந்த பிரமாண்ட திட்டம் பிரமிக்க வைக்கிறது.
24 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் பயணம்… அதன்பிறகு அந்தரத்து பாலத்தில் அற்புத பயணம்…
என்று பயணிப்போம்? என்று ஏக்கத்துடன் பாலத்தை அண்ணாந்து பார்த்த சென்னைவாசிகளின் கனவு இன்னும் 2 வாரத்தில் நனவாக போகிறது.
கோயம்பேடு–ஆலந்தூர் வழித்தடத்தில் ரெயில்கள் ஓட தயாராகி விட்டன. 10.1 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த வழித்தடம் முற்றிலும் ஆய்வு செய்யப்பட்டு ரெயில்கள் இயக்குவதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளன.
கோயம்பேடு பணிமனை வளாகத்தில் 25 ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் 9 ரெயில்கள் சோதனை முறையில் 1600 கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்பட்டு பயணிகளை சுமந்து செல்ல தகுதி பெற்று தயாராக நிற்கிறது.
4 பெட்டிகளை கொண்ட ஒவ்வொரு ரெயிலிலும் 1,276 பயணிகள் பயணம் செய்ய முடியும். கோயம்பேடு–ஆலந்தூர் இடையே 10 நிமிடத்துக்கு ஒரு ரெயிலை இயக்க திட்டமிட்டுள்ளனர். பயணிகள் வரவேற்பை பொறுத்து கூடுதலாக இயக்கப்படும்.
45 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில் சென்னையை சுற்றி வந்தாலும் இதன் ‘லகான்’ கோயம்பேட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையில்தான் இருக்கிறது. பிரமாண்டமாக, நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி ரெயில் பாதை முழுவதும் கண்காணிக்கப்படுகிறது.
இந்த கட்டுப்பாட்டு அறை முற்றிலும் கிராமத்து இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் கட்டுப்பாட்டில் இயக்குவது வியக்க வைக்கிறது. அறிவிலும், ஆற்றலிலும் நகரவாசிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல கிராமவாசிகள் என்பதை இவர்கள் நிரூபித்து இருக்கிறார்கள்.
நாக நந்தினி டிப்ளமோ பட்டதாரியான இவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்.
நீல நிறத்தில் கோட்–சூட்டுடன் சிவப்பு ‘டை’ கட்டி கட்டுப்பாட்டு அறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இவரது கட்டுப்பாட்டில்தான் ரெயில்களின் இயக்கம். போக்குவரத்து கட்டுப்பாட்டாளராக பணிபுரியும் இவரது வேலை ரெயில் பாதைகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கம்ப்யூட்டர் திரையில் கண்காணிப்பது. தேவைப்பட்டால் உடனடியாக ரெயிலை நிறுத்துவது.
இவரைப்போல் போக்குவரத்து கட்டுப்பாட்டாளராக வேலை பார்க்கும் இன்னொரு இளைஞர் சையத் இப்ராகிம். நெல்லை மாவட்டம் அரிகேசவ நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்.
சிக்னல் கட்டுப்பாட்டாளராக பணியமர்த்தப்பட்டுள்ள இரு இளம்பெண்களும் தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய கிராமப் பகுதியில் இருந்து வந்தவர்கள்தான்.
இவர்கள் அனைவரும் 2013–ல் தேர்வு செய்யப்பட்டு டெல்லி மெட்ரோ ரெயில் கழகத்தில் ஒரு ஆண்டு பயிற்சி பெற்றுள்ளார்கள்.
நாட்டின் முதுகெலும்பே கிராமங்கள்தான் என்பார்கள். இந்த குக்கிராமத்து இளசுகளின் கட்டுப்பாட்டில் பெருநகரத்து மெட்ரோ ரெயில்கள்.
கோயம்பேடு–ஆலந்தூர் வழித்தடத்தில் கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், வடபழனி, அசோக் நகர், தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 ரெயில் நிலையங்கள் உள்ளன.
சராசரியாக 1.2 கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள இந்த ரெயில் நிலையங்களில் 30 வினாடிகள் ரெயில் நின்று செல்லும்.
ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் குறைந்தபட்சம் 30 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பிளாட்பாரங்கள், தண்டவாளம் உள்பட ரெயில் நிலையத்தின் அனைத்து பகுதிகளையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி வீடியோ திரையில் கண்காணிப்பார்கள்.
தினசரி இரவில் பணிமனையில் ரெயில்கள் சுத்தம் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதிகாலை 5 மணிக்குள் தகுதி சான்று வழங்கப்படும். அதன்பிறகே ரெயில்கள் இயக்கத்திற்கு அனுமதிக்கப்படும்.
இந்த வழித்தடத்தில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அசோக் நகர்–கிண்டி தொழிற்பேட்டை இடையே மட்டும் அதிகபட்ச வேகமாக 72 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கவும் மற்ற இடங்களில் சராசரியாக 35 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கவும் திட்டமிட்டுள்ளனர்.