சன் குழுமத்தின் உரிமம்!!!!!!!

Sun_TV_Network_300

தனக்கு எதிராக கருத்துக்கள் வெளியாகிவிடக் கூடாது என்பதற்காக எதிர்கருத்து உடையவர்களை முடக்குவதும் அழித்துவிடுவதும் தொன்று தொட்டு வருபவை தான். இதில் ஊடகங்களுக்கும் விதி விலக்கல்ல. சர்வதிகாரத்தின் முதல் குரல் நெரிப்பு ஊடகங்களின் மீது தான் இருக்கும்.

இப்பொழுது சன் குழுமத்தின் உரிமத்திற்கு அனுமதி மறுப்பது பற்றி பல ஊடகக்காரர்கள் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஊரு ரெண்டுப்பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று எங்கள் ஊரில் பழமொழி உண்டு. அதுபோல தான் இந்த ஊடககாரர்களின் வன்மமும். குற்றம் செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. தங்களை ஒரு நடுநிலைக்காரர்களாகவே காட்டிக்கொள்ள வேடம் அணிந்து இருப்பவர்கள் பலர் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக கிழியத் தொடங்குகிறது.

ஏன் இவ்வளவு அவசரமாக சன் குழுமத்திற்கு தடை விதிக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. தாயநிதி மற்றும் கலாநிதி வழக்குகள் முடிந்து நிரூபணம் ஆனப் பிறகு தடை விதிக்கலாம் அல்லவா. அப்படி ஏன் செய்ய முயற்சிக்கவில்லை இந்த அரசு. இப்படி ஏன் எந்த நடுநிலை ஊடகவியலாளர்கள் குரல் கொடுக்கவில்லை.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2016 நடக்கும் என்றாலும் அதற்கு முன்பாக நடப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். இந்தத் தேர்தலில் பாசக தமிழகத்தில் கூட்டணியுடன் குறைந்தப் பட்ச சீட்டுகளாவது வாங்கி இங்கு மீண்டும் கால்பதித்திட வேண்டும் என்பது தான். அதற்காக அவர்கள் இப்பொழுது தமிழகத்தில் இருக்கும் ஆளுங்கட்சியுடன் கூட்டணி என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இவர்களுக்கு இருக்கும் ஊடகப் பலத்தை ஒழித்துவிட்டால் திமுகவையும் ஒழித்து விடலாம் என்பது தான் அவர்களின் கணக்கு. சன் டிவியின் நிலைமை தான் அடுத்து உங்களுக்கும் என்ற மிரட்டல் பின்னர் எல்லா ஊடகத்திற்கும் தொடரும். ஆக இவர்களுக்கு ஆதரவான செய்திகள் மட்டுமே வெளிவரும். இன்று தூர்தசனை தனது கைக்குள் வைத்துக் கொண்டது போல அனைத்து தனியார் தொலைகாட்சிகளையும் பண்பலைகளையும் ஆளும்கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட வேண்டும் என்பது தான் இவர்களது திட்டம்.

இன்று வரை தங்களை நடுநிலை ஊடகக்காரர்களாக முன்னிறுத்தியவர்கள் எத்தனைப் பேர் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் சரிசமமாகவும் நேரடியாகவும் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். குறிப்பாக கருணாநிதியை விமர்சனம் செய்வது போல ஜெயலலிதாவை விமர்சனம் செய்தார்களா என்று வினவினால் அதற்கு பதில் அவரவர் மனசாட்சியை தொட்டு தான் பதில் சொல்ல வேண்டும். அப்பொழுது அவர்களுக்குத் தெரியும் அவர்களின் நடுநிலைப் போர்வை.

சரி அதெல்லாம் இருக்கட்டும் அரசு கேபிளில் எத்தனைத் தடவை தனியார் செய்தி தொலைக்காட்சிகளைப் பிடுங்கி விட்டார்கள் என்பது இங்கு இருக்கும் நடுநிலை ஊடகவியலாளர்களுக்குத் தெரியாதா? ஜெயலலிதாவின் செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களின் பங்கு என்ன ? தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை வினவுவது போல ஏன் ஜெயலலிதாவை நீங்கள் ஏன் வினவுவதில்லை. நரேந்திர மோடியை ஏன் வினவுவது இல்லை. சும்மா ஒலிவாங்கியை முன்னால் வைத்துவிட்டு அவர்கள் பேசுவதை படமெடுத்து ஒளிப்பரப்புவதற்கு செய்தியாளர்கள் தேவையில்லை. நல்ல கைபேசி இணையத்துடன் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் நேரலை செய்து விடலாம்.

எந்தத் தடங்கல்களும் இல்லாமல் உங்களால் ஒரு செய்தியை ஒளிப்பரப்ப முடிகிறதா. நடுநிலை செய்தியாளர்கள் பதில் அளிக்கலாம்.

மனச்சட்சி உள்ள ஒரு செய்தியாளர்…..