குழந்தைகளின் உணவு

newborn-baby-photography

குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்

இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.

  • 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.
  • பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது.
  • குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.
  • 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.
  • முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்:

 

வாழைப்பழம் – ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.

ஆப்பிள் – ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.

அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.
அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.

பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.

சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.

குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.