அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைகிறார் மு.க. அழகிரி?

Alagiri

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி பாரதிய ஜனதா கட்சியில் இணையப்போவதாக அமித்ஷா மதுரைக்கு வரும் போது அவரது முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பா.ஜ.க.வில் இணையப் போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரையில் வரும் 15-ந் தேதி பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் தமது ஆதரவாளர்களுடன் அழகிரி ஐக்கியமாவார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15-ந் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடார் மகாஜனம் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்த விழாவில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்று, காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதன்பின் பகல் 12 மணிக்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில், தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை சார்பில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் அன்று மாலை 5 மணிக்கு பங்கேற்று அமித்ஷா பேசுகிறார். தென் மாவட்டங்களுக்கு முதன்முறையாக வருகை தரும் அமித்ஷா மதுரை மற்றும் விருதுநகர் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்பதை ஏற்க முடியாது என பகிரங்கமாக தெரிவித்தவர் மு.க. அழகிரி. லோக்சபா தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட கூட்டணி முயற்சிகளுக்கு வேட்டும் வைத்தார் அழகிரி. இதனால் தி.மு.க.வில் இருந்து முதலில் அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டர். அதன் பின்னர் ஸ்டாலின் தொடர்பாக கடுமையான விமர்சனத்தை கருணாநிதியிடம் முன்வைத்ததால் ஒட்டுமொத்தமாக தி.மு.க.வில் இருந்தே அழகிரி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். திமுகவில் இருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆன பின்னரும் பலமுறை திமுக தலைவரும் தந்தையுமான கருணாநிதிக்கு சமாதான தூது அனுப்பியும் எந்த பலனும் இல்லை என்பதால் அழகிரி கடந்த சில மாதங்களாக அமைதியாகவே இருந்து வந்தார்.

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் அழகிரியின் தீவிர ஆதரவாளருமான நெப்போலியன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தார். அதே நேரத்தில் அழகிரியின் மற்றொரு ஆதரவாளரான திமுக முன்னாள் எம்.பி ஜே.கே.ரித்தீஷ் அதிமுகவில் இணைந்தார்.

திமுகவில் இருந்து வெளியேறிய இருவரும் அழகிரி ஆசியுடனே வேறு கட்சியில் இணைந்ததாக பேட்டியளித்தனர். அழகிரி தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் சில நேரங்களில் தகவல்கள் வெளியானது. ஆனால் அழகிரி எந்தவித ரியாக்சனும் காட்டாமல் இருந்து வந்தார்.
சமீபத்தில் அறிவுநிதி திருமணம் நடைபெற்ற போது கூட எப்படியாவது குடும்பத்தினருடன் இணைந்து விட வேண்டும் என்றும், கட்சியில் மீண்டும் பழைய பொசிஷனுக்கு வந்து விட வேண்டும் என்றும் முயற்சி செய்தாராம் அழகிரி. ஆனால் ஸ்டாலின் தரப்பு அதற்கு ரெட் சிக்னல் போட்டுவிட்டது.

பாஜகவில் இணைய திட்டம்? இந்த நிலையில்தான் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் அழகிரி இணையப் போவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்மாவட்டங்களில் காலூன்ற நினைக்கும் பாஜக வலுவான அடித்தளம் உள்ள தலைவர்களை இணைக்க தூது விட்டு வருகிறது. இந்த வகையில்தான் அழகிரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று மு.க. அழகிரி வாய்திறந்தால் மட்டுமே தெரியவரும்.