அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரெண்டன் மெக்கல்லம் இல்லாமல் மும்பையை சந்திக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதிக்குமா?

மும்பை, மே 18-
ஐ.பி.எல். சீசன் 8-ன் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. புள்ளிகள் அடிப்படையில் சென்னை அணி முதல் இடத்தையும், மும்பை அணி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனால் இந்த இரண்டு அணிகளும் நாளை குவாலிபையர் பிரிவில் விளையாட இருக்கிறது. இதில் சென்னை அணி, அதிரடி வீரர் மெக்கல்லம் இல்லாமல் களம் இறங்க இருக்கிறது.
சமீபத்தில் முடிவடைந்த உலகக்கோப்பையில் அதிரடி மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த மெக்கல்லம் ஐ.பி.எல். போட்டியிலும் அதிரடி காட்டி சென்னை சூப்பர்கிங்ஸ் ரகிசகர்களை வெகுவாக கவர்ந்தார். 14 லீக் போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு சதம், இரண்டு அரை சதத்துடன் 436 ரன்கள் குவித்துள்ளார். இதில் 51 பவுண்டரிகளும், 23 சிக்சர்களும் அடங்கும். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக மெக்கல்லம், சுமித் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் நியூசிலாந்து அணி வரும் 21-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாட இருக்கிறது. இதற்காக அவர் நியூசிலாந்து புறப்பட்டு சென்று விட்டார்.
ஆகவே சென்னை அணி திடீரென தொடக்க வீரருக்கு மாற்று வீரரை இறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு முன்னோட்டமாக சென்னை அணி தனது கடைசி லீல் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக சுமித்தை நீக்கி விட்டு மைக் ஹசியை இறக்கியது. ஆனால், மைக் ஹசி 6 பந்துகளை சந்தித்து ஒரு ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் சென்னை அணி மும்பைக்கு எதிரான போட்டியில் தொடக்கத்தில் அதிக ரன்கள் குவிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில் எந்த பந்து வீச்சாளர்கள் பந்து வீசினாலும் அதிரடியாக விளையாடக்கூடியவர் மெக்கல்லம். ஆனால் அவர் இல்லாததால் மும்பையின் முன்னணி பந்து வீச்சாளர்கள் மலிங்கா, மெக்ளெனகன் பந்து வீச்சை மெக்கல்லம் அல்லாமல் சென்னை அணி சிறப்பாக எதிர்கொள்ளுமா? என்று 19-ந்தேதி தான் தெரியும்.
மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் சென்னை அணி தோற்றாலும் மற்றொரு வாய்ப்பு உள்ளது.